தமிழகத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் பிரச்னைக்கு அடுத்தபடியாக தற்போது விஸ்வரூபம் எடுத்திருக்கும் பிரச்னை சேலம் டு சென்னை 8 வழி பசுமைச் சாலைத் திட்டம்.
இந்தத் திட்டத்தை ஆதரித்து ஒரு தரப்பினரும், எதிர்த்து மற்றொரு தரப்பினரும் செயல்பட்டு வருகிறார்கள். சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி,திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டத்தின் வழியாக இச்சாலை அமைக்கப்பட உள்ளது.
இந்தியாவின் இரண்டாவது பசுமை நெடுஞ்சாலை தலைநகர் சென்னையிலிருந்து சேலத்திற்கு அமைக்கப்பட இருக்கிறது. இந்த புதிய பசுமை நெடுஞ்சாலை பற்றியத் தகவல்களை காணலாம்.
ரூ.10,000 கோடி
- ரூ.10,000 கோடி செலவில் இந்த புதிய பசுமை நெடுஞ்சாலை அமைக்கப்பட இருக்கிறது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளை துவங்குமாறு தமிழக அரசுக்கு தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் முறைப்படி கடிதம் எழுதி இருக்கிறது.
274 கிமீ தொலைவு
- இந்த நெடுஞ்சாலை 274 கிமீ தொலைவு கொண்டதாக அமைக்கப்பட இருக்கிறது. இதில், 250 கிமீ தூரமானது வனப்பகுதியில் அமைக்கப்பட இருக்கிறது.
- சென்னை தாம்பரத்தில் துவங்கி தர்மபுரி மாவட்டம் அரூர் வரையிலான தேசிய நெடுஞ்சாலையானது 179B எனவும், அரூர் முதல் சேலம் வரையில் அமைக்கப்பட இருக்கும் புதிய நெடுஞ்சாலை 179A என்ற பெயரிலும் குறிப்பிடப்படும்.
- இந்த சாலையானது காஞ்சிபுரம் மாவட்டத்தில் 59 கிமீ தூரத்திற்கும், திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு, வந்தவாசி, போளூர், ஆரணி மற்றும் செங்கம் வரையில் 122 கிமீ தொலைவிற்கும் அமைக்கப்பட உள்ளது.
- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 கிமீ தூரம் தொட்டுச் செல்லும் இந்த சாலை மீண்டும் தர்மபுரியில் தீர்த்தமலை, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி என 53 கிமீ தொலைவுக்கு அமைய இருக்கிறது. சேலம் மாவட்டத்தில் வாழப்பாடியிலிருந்து சேலம் மாநகரம் வரை 38 கிமீ தொலைவிற்கு அமைக்கப்பட இருக்கிறது.
- தற்போது சென்னையிலிருந்து உளூந்தூர்பேட்டை வழியாக சேலம் வரையில் 360 கிமீ தொலைவுக்கான நெடுஞ்சாலை பயன்பாட்டில் இருக்கிறது. புதிய பசுமை நெடுஞ்சாலையின் மூலமாக இரு நகரங்களுக்கு இடையிலான தொலைவு 60 கிமீ வரை குறையும்.
3 மணிநேர பயணம்
- சென்னையிலிருந்து உளுந்தூர்பேட்டை வழியாக சேலத்திற்கான சாலையானது, இரு நகரங்களையும் 6 மணிநேரத்தில் இணைக்கிறது. ஆனால், புதிய பசுமை நெடுஞ்சாலையின் மூலமாக இரு நகரங்களையும் வெறும் 3 மணிநேரத்தில் இணைக்க முடியும்.
- தற்போதுள்ள பயண நேரத்தைவிட இது பாதியாக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், வாகனங்களின் எரிபொருள் சிக்கனமும் வெகுவாக மேம்படும் வாய்ப்பு கிடைக்கும்.
- இந்த சாலையில் சென்னை மற்றும் சேலம் இடையிலான போக்குவரத்து மிகச் சிறப்பாக மாறுவதுடன், ஆன்மிக தலமாக விளங்கும் திருவண்ணாமலை நகரமும் மிகச் சிறப்பான போக்குவரத்து வசதியை பெறும்.
- மேலும், இது Controlled access highway என்ற நவீன கட்டமைப்பு வசதிகளுடன் 8 வழித்தட சாலையாக அமைக்கப்பட இருக்கிறது. இதன்படி, வாகனங்கள் இந்த சாலையிலிருந்து பாதுகாப்பாக வெளியேறுவதற்கும், உள் நுழைவதற்கும் ஏதுவான கட்டமைப்புகளை பெற்றிருக்கும்.
- அதேபோன்று, நேராக செல்லும் வாகனங்கள் வேகத்தை குறைக்காமலும், பாதுகாப்பாகவும் கடந்து செல்ல முடியும். இந்த சாலையில் சிக்னல்கள், சாலை சந்திப்புகள் இல்லாத வகையில் கட்டமைக்கப்பட உள்ளது. இதனால், மிக சுலபமாகவும், விரைவாகவும் பயணிக்க முடியும் என்பதால், பயண நேரம் பாதியாக குறையும்.
- இதுபோன்ற மிக நவீன சாலை கட்டமைப்பு திட்டத்தை முதல்முறையாக தமிழக அரசு செய்ய இருக்கிறது. மேலும், இந்தியாவிலேயே இது இரண்டாவது பசுமை வழித்தட நெடுஞ்சாலையாகவும் அமைய இருக்கிறது.
சேலம் டு சென்னை 8 வழி பசுமைச் சாலையால் மக்களுக்குக் கிடைக்கும் ப்ளஸ் என்ன? மைனஸ் என்ன?
ப்ளஸ்:
1. சேலம் டு சென்னைக்கு தற்போது 5 1/2 முதல் 6 மணி நேரம் ஆகிறது. ஆனால் 8 வழி பசுமைச் சாலை அமைந்தால் 3 மணி நேரத்தில் சென்னைக்கு சென்று விடலாம். இதனால் சுமார் 2 1/2 நேரம் மிச்சமாகிறது.
2. எரிபொருள் செலவு குறைகிறது. வருடத்துக்கு 700 கோடி ரூபாய் மதிப்பிலான எரிபொருள் மிச்சம் ஆகும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
3. இந்த 8 வழி பசுமைச் சாலையில் தனியார் கார்களும், சொகுசுப் பேருந்துகள் மட்டுமே பயணிக்க முடியும் என்ற மாயை உள்ளது. அது தவறு. வெகுஜன மக்களும் பயணிக்கும் வகையில் பேருந்துகள் விடப்பட இருப்பதால் இச்சாலை அனைத்து மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
4. வளர்ந்து வரும் இந்தக் காலகட்டத்துக்கு இந்த 8 வழிச் சாலை அவசியமானது. போக்குவரத்து நெரிசலைத் தவிர்த்து, விரைவாக நாம் செல்ல வேண்டிய இடத்துக்குச் செல்ல முடியும்.
5. பெருமளவு விபத்துகள் குறைக்கப்படும்.
6. விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருள்களை விரைவில் சென்னை போன்ற பெரு நகரத்துக்குக் கொண்டு செல்லுவதோடு வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம். இதனால் விவசாயிகளின் விலைப் பொருள்களின் மதிப்பு கூடும். விலை அதிகரிக்கும்.
7. இந்தப் புதிய திட்டத்தால் பின் தங்கிய மாவட்டமாக உள்ள தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை போன்ற பகுதிகளின் நிலத்தின் மதிப்பு கூடுவதோடு சாலை போக்குவரத்து வணிகம் அதிகரிக்கும்.
8. புதிய தொழில் நிறுவனங்கள் வரக்கூடும். இதனால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.
9. தமிழகம் வேளாண்மைத் துறையில் இருந்து தொழில் துறைக்கு முன்னேற்றம் அடையும்.
10. மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுவதோடு அனைத்து விதமான கட்டமைப்பு வசதிகளும் உருவாக்கப்படும்.
மைனஸ்:
1. பசுமைச் சாலைத் திட்டத்தால் கஞ்சமலை, ஜருகுமலை, கல்வராயன் மலை, கவுதி மலை, வெடியப்பன்மலை , தீர்த்தமலை என மீள் உருவாக்கம் செய்ய முடியாத 8 மலைகள் பாதிக்கப்படுகின்றன.
2. இத்திட்டத்தால் ஆறுகள், ஏரிகள், கிணறுகள், கண்மாய் போன்ற பல நீர்நிலைகள் அழிக்கப்படுவதோடு நிலத்தடி நீரும் பாதிப்படைய வாய்ப்பு உள்ளது. தற்போது உணவுப் பொருள்களை வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதைப் போல நீரையும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் சூழல் ஏற்படும்.
3. இந்தியாவில் விவசாயம் அழிந்து வரும் நிலையில் இத்திட்டத்தால் நிறைய விவசாய நிலங்கள் அழிக்கப்படும். விவசாயத் தொழிலை நம்பி வாழக்கூடிய விவசாயிகள், விவசாயக் கூலிகள், விவசாயத் தொழிலைச் சார்ந்து வாழக்கூடிய சார்பு நிலை தொழிலாளர்கள் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தொழிலை இழக்கக் கூட நேரிடலாம்.
4. இத்திட்டத்தால் அதிகளவு விளை நிலங்கள் பாதிக்கப்படுவதால் விளைபொருளின் உற்பத்தியும் பாதிக்கப்படும். இதனால் உணவு உற்பத்தி குறைந்து விலைவாசி அதிகரிக்கும். உணவுப் பஞ்சம் ஏற்படக் கூடும். உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெறாத மாநிலமாக தமிழகம் மாறும்.
5. கனிம வளங்கள் இல்லாத நிலம் பாலைவனம் என்பதைப் போல கஞ்சமலை, கவுதிமலை, வெடியப்பன் மலையில் உள்ள இரும்புத் தாதுகளும், தருமபுரியில் மாவட்டத்தில் பிளாட்டின பாறைகளும், கல்வராயன் மலை, ஜருகு மலையில் உள்ள கருங்கற்களும் பாதிக்கப்படுவதோடு, நிலத்தடியில் உள்ள கனிமங்களும் பாதிக்கும்.
6. பசுமை வழிச் சாலையின் இரு புறமும் சுற்றுச்சுவர் கட்டுவதால் ஒட்டி இருந்த கிராமங்கள் தொடர்புகளே இல்லாமல் பிரிக்கப்படும்.
7. இச்சாலையில் தொடக்கமே 120 கி.மீட்டர் வேகத்தில் செல்ல வேண்டியிருப்பதால் சாதாரண வாகனங்கள் செல்ல முடியாது.
8. இச்சாலை 10 ஆயிரம் கோடியில் உருவாக்குவதால் டோல்கேட் சார்ஜ் குறைந்தது கி. மீட்டருக்கு 5 ரூபாய்க்கு மேல் இருக்கும். இதனால் ஏழை, நடுத்தர மக்கள் இச்சாலையில் பயணிக்க முடியாது.
9. ஆரணி, போளூர், செங்கம், திருவண்ணாமலை, அரூர் போன்ற பகுதிகளில் 23 கி.மீட்டர் வனப்பகுதியில் செல்லுவதால் வன உயிரினங்களின் வழித்தடங்கள் அழிக்கப்படுவதோடு அவற்றின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகும்.
10. இயற்கையைக் காக்க உலக நாடுகள் முன் வரும் நிலையில் இத்திட்டத்தால் பழைமை வாய்ந்த 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்படுகிறது. அதற்குப் பதிலாக 4 மடங்கு மரங்கள் நட்டாலும் அது சமநிலை செய்யக் குறைந்தது 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகும். மரங்கள் அழிக்கப்பட்டால் கார்பன் டை ஆக்ஸைட் அதிகரிக்கும், ஆக்ஸிஜன் குறையும். கார்பன் டை ஆக்ஸைட் அதிகரித்தால் உலக வெப்ப மயமாதல் அதிகரிக்கும்.
மக்களின் கேள்வி என்னவென்றால் விவசாயம் வேகமாக அழிந்துவரும் இவ்வேளையில் பசுமையை அழித்து உருவாக்கும் இந்த பசுமை நெடுஞ்சாலை தேவைதானா? என்பதுதான்.....